Friday 2 December 2016

செவ்வணக்கம்... கமாண்டர்... பிடல்...












கியூபாவின் கிழக்கு கோடியில் அமைந்துள்ள சாண்டியாகோ டி கியூபா துறைமுகத்திலிருந்து 1959-ல் தனது 82 தோழர்களுடன் எந்தந்த கிராமங்கள், நகரங்கள் வழியாக ஹவானாவின் புரட்சி சதுக்கத்தை அடைந்தாரோ, அதே புரட்சி சதுக்கத்திலிருந்து, அதே நகரங்கள், கிராமங்கள் வழியாக சாண்டியாகோ நோக்கி பயணப்படுகிறார் கமாண்டர் பிடல்... ஆனால் தனது புரட்சிகர எழுச்சியையும், சிந்தனைகளையும் வழிநெடுகிலும் கியூபாக் கொடியை ஏந்தி கண்ணீர் மல்க விடைகொடுக்கும் லட்சோபலட்சம் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு பீனிக்ஸ் பறவையின் சாம்பலாய் பயணப்படுகிறார், தோழர். பிடல் . சாண்டியாகோவை நோக்கிய தனது பயணத்தில் முதல் நிறுத்தமாக கியூபா புரட்சியின் மகத்தான தோழனும்..., தனது தோளோடு தோள் நின்ற மாவீரனுமான சே குவேராவின் நினைவிடமாம் சாந்தா கிளாராவில் பிடல் சற்று இளைப்பாறினார்.

செவ்வாய்க்கிழமை (29-11-2016) அன்று சூரியன் உதித்தவுடன் பிடலின் அதிகாரப்பூர்வ இறுதிப் பயணம் துவங்கியது. இந்திய நேரப்படி அது புதன் கிழமை (30-11-2016), இரண்டு நாட்கள் அஞ்சலிக்கு பிறகு..., ஒட்டுமொத்த ஹவானா மக்களும் தங்களது மகத்தான தலைவனுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். வெறிச் சோடியம் கனத்த இதயங்களோடும் கிடந்த ஹவானா வீதிகளில் பிடல் பயணித்தார்.

முதியவர்கள் ஆற்றாமை தாங்காமல் கதறினார்கள், இளையவர்கள் புரட்சியை காக்க உன் வழியில் நாங்கள் இருக்கிறோம் பிடல்..., போய் வா..., உனக்கு எங்கள் செவ்வணக்கம் என்று முழங்கினார்கள். அடுத்த மூன்று நாட்கள் 550 மைல்கள் தூரம் பிடல் பயணிக்கிறார். வழிநெடுகிலும் கியூப மக்கள், தங்கள் இதயத்தில் நிறைந்து இருக்கும் மாபெரும் புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் கடைசி வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டதே என்று எண்ணி, அந்த எளிய ராணுவ வாகனத்தில் வரும் அவரது சாம்பலைத் தாங்கிய பெட்டியையேனும் பார்த்து புரட்சி ஓங்குக... என முழக்கமிடும் வாய்ப்புக்காக, கமாண்டர் பிடல்... உனக்கு எங்கள் செவ்வணக்கம் என்று உறுதியேற்கும் வாய்ப்புக்காக வழிநெடுகிலும் கியூப மக்கள் காத்திருக்கிறார்கள்.

முன்னதாக..., ஹவானாவின் புரட்சி சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற..., "பிடலுக்கு இறுதி விடை கொடுக்கும்" இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனாதிபதியும், பிடலின் சகோதரரும், கியூப புரட்சிக்கு தலைமையேற்ற மகத்தான கொரில்லா படை தளபதிகளில் ஒருவருமான "ரால் காஸ்ட்ரோ" தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து அரசுத் தலைவர்கள் பங்கேற்றனர். பிடலின் சாம்பல் அடங்கிய பெட்டிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நமது இந்திய அரசின் சார்பில்..., மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் து. ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம். ஏ. பேபி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, பொலிவியா ஜனாதிபதி ஈவோமொரேல்ஸ், நிகரகுவா ஜனாதிபதி டேனியல் ஓர்டேகா, சீன துணை ஜனாதிபதி லீ யுவான்சாவோ, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா உள்பட 60 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர், அவர்களில் 18 பேர் உணர்ச்சிமிகு இரங்கல் உரை ஆற்றினர்.

நன்றி: - தீக்கதிர்., நாளிதழ். 

No comments:

Post a Comment